அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்த தேசபந்து!
இவர் ஒரு குற்றவாளி, ஆனால் இவர் அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார், இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதள உலகத்தினர் போன்றவர் என நீதிமன்றத்தில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்குவதை கடுமையாக எதிர்த்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம், அதற்கான வாதங்களையும் நேற்று நீதிமன்றில் முன்வைத்தது.
வெலிகமவில் 2023ஆம் ஆண்டு விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்பட்டு வந்த தென்னக்கோன், 2025 மார்ச் 19 அன்று மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து நீதிமன்றம் அவரை இன்றுவரை( மார்ச் 20) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
திலீப பீரிஸ்
இந்தநிலையில், குறித்த உத்தரவுக்கு முன்னதாக, நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதியான, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், தலைமறைவாகி சரணமடைந்துள்ள தென்னக்கோனுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர், ஒரு ஆடம்பர பென்ஸ் சிற்றூந்தில், நீதிமன்ற வளாகத்திற்குள் அமர்ந்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலைப் பெற்ற பின்னரே, தாம் இந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக முடிவு செய்ததாக திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர், ஒரு இரகசிய பூனை போல நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளார், சட்டத்துறைக்கு அறிவிக்காமல் பிணை பெற முடியும் என்று நம்புகிறார். தாம் நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட, அவர் ஒரு இருக்கையில் முறையாக உடையணிந்து அமர்ந்திருந்தார்.
குற்றவாளியான அவர் எவ்வாறு இருக்கையில் அமர்ந்திருக்க முடியும். அவர் தடுப்பில் அல்லவா இருக்க வேண்டும் என்று திலீப பீரிஸ் வாதிட்டுள்ளார்.
அவர் ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளி ஆணவத்துடன் நீதிமன்றத்திற்குள் நடந்து கொள்ளக்கூடாது. அவர் தனது தொலைபேசியை துண்டித்து விட்டு சுமார் 20 நாட்கள் நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி
அவர் மாகந்துரே மதுஷ் மற்றும் ஹரக் கட்டா போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிலிருந்து வேறுபட்டவர் அல்ல.
மேலும், அவர் ஒரு திறமையான நடிகர் - அவருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும்போது மட்டுமே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அத்துடன் இந்த சந்தேக நபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் முதல் பிரதிவாதியாக மாத்தறை நீதிவானை குறிப்பிட்டு, நீதிமன்றத்தை சதி செய்ததாகவும் சட்ட மா அதிபரின் பிரதிநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சந்தேக நபர், பொலிஸ் மா அதிபராக இருந்த காலத்தில், சட்டத்தரணிகள், குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகக் கூறியிருந்தார் ஆனால் இன்று, நீதிமன்றத்தில் முன்னிலையாக அவரே சட்டத்தரணிகளை நாடியுள்ளார். இது விருந்தக துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு மட்டுமல்ல. இது, கர்ம வினை செயல்பாடும் ஆகும். இன்று அவர் அதனை நேரடியாக உணர்கிறார் என்றும் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு, பிரபாகரனை தேடுவது போன்று அவரைக் கண்டுபிடிக்க பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் நேற்று வரை கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அவர் தனது சமூக மற்றும் மத செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார்.
அவரது வசிப்பிடமாக பட்டியலிடப்பட்ட முகவரி உண்மையில் ஒரு புத்த துறவி ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பிறரிடம் பொலிஸார்; விசாரித்துள்ளனர். அவர் செல்வாக்கு மிக்கவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.
பொலிஸார் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, நூறு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 795 மது போத்தல்களை கண்டுபிடித்தனர்.
எட்டு வீடுகள்
100க்கும் மேற்பட்ட பரிசுப்பொதிகள் இருந்தன. அரசு ஊழியர்களுக்கு எளிய பரிசுப் பொட்டலங்களைக் கூடப் பெற முடியாது, எனவே அவர் இவற்றை எப்படிப் பெற்றார்?
அவரது வீடு வெறும் வீடு அல்ல - அது மதுபான ஆலை. அவரது பெயரில் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அவருக்கு சுமார் எட்டு வீடுகள் உள்ளன.
அதனால்தான் அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விட ஆபத்தானவர் என்று தாம் கூறுவதாக தெரிவித்த திலீப பீரிஸ், அவர் ஒரு பேய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தென்னக்கோனின் பிணைக் கோரிக்கையை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தினார்.
அவரது பதவி மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபர் விடுவிக்கப்பட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்றும் சட்ட மா அதிபரின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தென்னகோன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சானக ரணசிங்க, தமது கட்சிக்காரர் நிவாரணம் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் தானாக முன்வந்து நீதிமன்றத்தில் முன்னிலையானார் என்று குறிப்பிட்டார் தமது கட்சிக்காரர் பொலிஸ் மா அதிபராக, ‘யுக்திய’ என்ற பெயரில் ஒரு பெரிய நடவடிக்கையை வழிநடத்தினார்.
இந்த நடவடிக்கையின் மூலம், குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஏராளமான நபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
எனவே, இந்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கவேண்டுமானால், அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சானக ரணசிங்க கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri
