மட்டக்களப்பு மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் : செந்தில் தொண்டமான் தெரிவிப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) இறால் வளர்ப்பு சம்பந்தமாக அபிவிருத்தி திட்டபணிகள் முன்னெடுக்கப்படும் போது அப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததை உறுதி செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் கடந்த 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட வேலைகள் முன்னெடுக்காமை பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இறால் வளர்ப்பு
அதேவேளை, வாகரைப் பிரதேசத்தில் அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தலைமையில் இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமாக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்தே குறித்த விசேட கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது, இறால்வளர்ப்பு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசேட அறிவுரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்துள்ளதுடன் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |