பொதுவேட்பாளர் தெரிவில் அனைவரின் ஆதரவும் அவசியம்: செந்தில் தொண்டமான் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவு செய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை.
51 வீதமான வாக்குகள்
ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தெரிவு செய்யமுடியும்.
மேலும், யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51 வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளன.
அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியானாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும்.
அதனால், ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் ஒன்றிணையும் போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன” என கூறியுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |