நெஞ்சு வலியில் துடித்த தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி: வெளியான பின்னணி
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தவுடன் அவருக்கு காரில் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் அமைச்சர் வீட்டிலேயே நெஞ்சு வலி என்று கத்தி தரையில் விழுந்து அழுததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் நேற்றுமுன்தினம் (13.06.2023) நடைபெற்ற 17 மணி அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, கரூர் இல்லத்தில் நடைபெற்ற சோதனையும் நள்ளிரவு நிறைவடைந்து, முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்து செல்லும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி சென்னை ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அவரை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், ஏ.வ வேலு, ரகுபதி, சேகர் பாபு உள்ளிட்டோர் சந்திக்க சென்றுள்ளனர். ஆனால் உள்ளே துணை ராணுவப் படை குவிக்கப்பட்டு அவரைக் காண அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து நேற்று (14.06.2023) காலை முதலமைச்சர் முக ஸ்டாலினும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
ஏற்கனவே செந்தில் பாலாஜியின் ஈசிஜி முடிவு சரியாக இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் ஓமந்தூரார் வைத்தியசாலை அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.
வைத்தியசாலையின் அறிக்கை
அதில், "மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை (14.06.2023) அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது.
அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன் வீட்டில் அரங்கேறிய நிகழ்வுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும் அடையாறில் உள்ள அவரது வீட்டில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் கைது செய்யப்போவதாக சொன்னதாகவும், அதற்கு அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக வலியில் கத்தியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் வலி தாங்காமல் அவரது வீட்டில் உள்ள புல் தரையில் விழுந்த செந்தில் பாலாஜி அங்கே உருண்டு புரண்டதாகவும் கூறப்படுகிறது. நள்ளிரவு என்பதால் நோயாளர் காவு வண்டியை அழைக்காமல் அமலாக்கத்துறை அதிகாரிகளே வாகனத்தில் செந்தில் பாலாஜியை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |