தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - வெளியாகியுள்ள புதிய தகவல்
தமிழ்நாட்டு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் அவரின் உடல் நலக்குறைவு போன்ற விடயங்கள் தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பேசுபொருளாக மாறியுள்ளது.
அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று (13.06.2023) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் நேற்று நள்ளிரவில் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளதுடன் அவருக்கு அறுவை சிகிச்சை ஓமந்தூரார் வைத்தியசாலை வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதேவேளை மத்திய அரசாங்கத்தின் இஎஸ்ஐ வைத்தியர்கள் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதித்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாறான சூழலில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 வீடுகளுக்கு இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.