பெருந்தொகை கஞ்சாவுடன் பொலிஸ் உயர் அதிகாரி கைது
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார ஹேரத், உலர்த்தப்பட்ட கஞ்சா போதைப் பொருள் தொகையுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ கஞ்சா
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிழக்கு மாகாண விசேட விசாரணைக்குழு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டை சோதனையிட்டு, அங்கிருந்து சுமார் 15 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
இந்த பொலிஸ் அத்தியட்சகர் பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக ஒரு அணியை வழிநடத்தி வருவதாகவும் அதிரடிப்படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் அண்மையில் பொலிஸ் அதிகாரியின் வீடு சோதனையிடப்பட்டது.
இந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பந்தமாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த காலங்களில் தம்மை ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றுமாறு பௌத்த மாநாயக்கர் தேரர்களிடம் கோரிக்கை விடுக்க சென்றிருந்த பொலிஸ் குழுவிலும் இடம்பெற்றிருந்தாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.