கட்சியின் தீர்மானத்தை மீறிய சிரேஷ்ட உறுப்பினர்கள் - மைத்திரி தலைமையிலான கூட்டத்தில் அதிரடி முடிவு
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீரவிற்கு அழைப்பில்லை
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பிற்கு நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தீர்மானத்தை மீறிய முக்கிய உறுப்பினர்கள்
இதேவேளை, சுதந்திரக்கட்சியின் துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோரும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டிருந்து.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பலரும் அரசில் இருந்து வெளியேறி தனி கூட்டணியாக செயற்பட ஆரம்பித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் தனித்து செயற்பட்டு வந்த நிலையில், அண்மையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் கட்சியின் தீர்மானத்தை மீறி சுதந்திரக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.