பொதுமக்களின் நிவாரணத்துக்காக 695 பில்லியன் ரூபாய்! அதிக்கப்படும் வரிகள்
அமைச்சரவை அங்கிகாரம்
நடப்பு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த குறை நிரப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி 695 பில்லியன் ரூபாவை பொதுமக்களின் நிவாரணத்துக்காக ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரதமர் முன்வைத்த உள்நாட்டு இறைவரி சட்டம், பெறுமதிசேர் வரி சட்டம், தொலைதொடர்பு சட்டம், நிதிமுகாமைத்துவ சட்டம், பந்தய சூது சட்டம் போன்றவற்றை திருத்துவதற்கான யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்தநிலையில் இந்த யோசனை திருத்தங்கள் நாடாளுமன்றின் அங்கிகாரத்துக்காக முன்வைக்கப்படவுள்ளன.
2019 இல் வரிக்குறைப்பு
2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிர்வாகம், வரிக்குறைப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்த பிறகு, அரசாங்கத்தின் வருவாய் கணிசமாகக் குறைந்தது.
இந்தநிலையில் குறித்த பிரச்சினையை சரிசெய்யும் வகையில், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து நிதிச் சட்டங்களில் திருத்தம் செய்ய முன்வந்துள்ளார்.
இதன்படி அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சட்டங்களைத் திருத்துவதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.