தமிழர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்! சபையில் செல்வம் அடைக்கலநாதன் ஆவேசம்(Video)
இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதேபோல அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இவை இரண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போது சிறையில் சிக்குண்ட எமது தமிழர்களை எங்கு கொண்டு புதைத்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழர்களை எங்கே கொண்டு சென்று புதைத்தீர்கள்
சிங்கள மக்கள் தாக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக இலங்கையில் போராடியவர்களை தாக்கியமை கண்டனத்திற்குரியது.
தாக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வடக்கு , கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் எங்களுடைய தமிழ் மக்கள் தாக்கப்பட்டபோது யாருமே எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அது ஒரு பயங்கரவாதமாகவே பார்க்கப்பட்டது. தற்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் காலமாக மாறி வருகின்றது.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர், யுவதிகள், எங்களுடைய தமிழ் தரப்பில் நடந்த போராட்டம் உண்மையானது என்பதை ஏற்றுக் கொண்டு வருகின்றார்கள்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியின் போதே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு அப்போது சிறையில் வைத்து கொல்லப்பட்ட எம் தமிழர்கள் எங்கே கொண்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை இப்போது வரைக்கும் கண்டுப்பிடிக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் எங்கே கொண்டு சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.