தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்.. எச்சரிக்கும் செல்வம் அடைக்கலநாதன்
வடக்கு - கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நேற்று (20.09) வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தலினை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்களின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா சபையிலே கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
மாகாணசபை தேர்தல்
இதேவேளை மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்றால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று இந்திய தூதுவரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயமானது ஒரு நியாயமான விடயமாக நான் பார்க்கின்றேன். எங்களை பொறுத்த வரையிலே ஒற்றுமை இல்லாமை என்பதனை கடந்த பாராளுமன்ற தேர்தலிலே நாங்கள் அனுபவித்திருந்தோம்.
குறிப்பாக எமது ஒற்றுமை இன்மை என்பதன் காரணமாக தமிழ் மக்கள் விரக்தியுடன் இருப்பதுடன் ஒற்றுமையான சூழலை எதிர்பாரத்து இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே மக்கள் யாருக்கு வாக்கு போடுவது என்ற குழப்பத்தில் இருந்தனர். மேலும் இவ் ஒற்றுமை இன்மையினாலேயே புதிய நபரை புதிய அரசை தெரிவு செய்ய வேண்டும் என்ற ரீதியிலேயே பாராளுமன்ற தேர்தலிலே மக்கள் வாக்களித்திருந்தனர்” என கூறினார்.



