சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகளை கைப்பற்றிய கியூ பிரிவு பொலிஸார் (Video)
இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு நேற்று மாலை கடத்தப்பட்ட சுமார் 443 அட்டைகளிலிருந்த 150 (MG) மில்லிகிராம் ப்ரீகபலின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை
உதவி ஆய்வாளர் வேல்ராஜ் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் பகுதிக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, கடற்கரையில் பதிவு எண் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளமொன்றை சோதனை செய்துள்ளனர். அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 4430 ப்ரீகபலின் 150mg வலி நிவாரண மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், வள்ளத்தில் இருந்தவர்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு வள்ளம் பறிமுதல் செய்யப்பட்டு மாத்திரைகளும் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கஞ்சா, புகையிலை, மஞ்சள், ஏலக்காய், களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில் தற்பொழுது மாத்திரைகளையும் கடத்துவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
கடலில் மிதந்து வந்த கஞ்சா பொதிகள்
இதேவேளை, இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது கடலில் மிதந்து வந்த கஞ்சா பொதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான சாக்கு பொதிகள் கடலில் மிதந்து வந்துள்ளன.
கைப்பற்றப்பட்ட பொதிகளை கடலோர காவல் படையினர் பிரித்து பார்த்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரியவந்ததுள்ளது.
இந்திய கடலோர காவல் படையினரின் விசாரணை
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 50 கிலோ எப்படி கடலில் மிதந்து வந்தது? யாரேனும் கடத்தல் காரர்கள் ரோந்து கப்பலை கண்டதும் கடலில் போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்களா? என்ற கோணத்தில் தீவிரமாக இந்திய கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.