அநுர தரப்பு எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இந்திய பாதுகாப்பு அமைச்சரை எதிர்த்திருக்கும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை விமான நிலையத்தை விட்டு வெளியேறக்கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் என ஜனசெத்த பெரமுனவின் தலைவரான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து தற்போதைய ஆட்சியாளர்கள் முரண்பாடான கொள்கைகளையே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இவ்வாறான ஒப்பந்தங்களுக்கு எதிராகச் சுவரொட்டிகள், பேனர்களைக் காட்சிப்படுத்தியும், பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் இறக்கியும் பாரிய போராட்டங்களை நடத்தியதை அவர் நினைவூட்டினார்.
இன்று அதே தரப்பினர் அமைதி காப்பது வியப்பளிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வளங்களையோ அல்லது பகுதிகளையோ இந்தியாவிடம் ஒட்டுமொத்தமாக ஒப்படைக்கத் தயாராகிறார்களா என்ற நியாயமான அச்சமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் சமூகமும் இந்தியாவும் இணைந்து நாட்டை ஆக்கிரமிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இது குறித்துச் சரியான புரிதல் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் ஒரு கருத்தையும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சீர்குலைக்கும் வகையிலும் செயல்படும் இத்தகைய அரசியல் போக்கினால் நாட்டின் ஆட்சிமுறை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக சீலரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.