ரூ.41 பில்லியன் ஒதுக்கீடு! 3 மாதங்களுக்கு எரிபொருள் மானியம்! ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைத் தணிக்கும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று (27) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த மானியத் திட்டத்திற்காக 41 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எரிபொருள் மானியம்
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் எரிபொருள் மானியம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவின அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் தாக்கத்தை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு
இத்தகைய நிதி ஆதரவு நடவடிக்கைகள் தற்காலிகமானதாகவும், பாதிக்கப்படக்கூடிய மக்களை இலக்காகக் கொண்டதாகவும், உரிய நிதி மதிப்பீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கம்பஹா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்தார்.
அரசியல் அதிகாரம் இறுதியில் மக்களிடமே இருப்பதாகவும், அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு இருக்கும் வரை அதனை எவராலும் கவிழ்க்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊழல் தொடர்பான விசாரணைகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார்.
தனிநபர்களை பழிவாங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், சில விசாரணைகள் மிகவும் சிக்கலானவை என்பதால் அவற்றை முன்னெடுப்பதற்கு சர்வதேச உதவியும் தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் நுழையத் தடை! டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஏதிலிக்கு நேர்ந்த சோகம்
திலீபனின் சிலை அகற்றம்! நாளை எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு