மது போதையில் பயணித்த பயணி தாக்கியதில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பலி:கொழும்பு - யாழ் ரயிலில் சம்பவம்
ரயிலில் மது போதையில் பயணம் செய்த பயணி ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி ரயிலில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு பயணிகள் ரயிலுக்குள் மது அருந்தியவாறு பயணம் செய்துள்ளனர்.
இதனை ஏனைய பயணிகள் ரயிவே பாதுகாப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ரயிவே பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பயணிகளை அவர்கள் பயணித்த ரயில் பெட்டியில் இருந்து வெளியில் அழைத்துச் சென்ற போது, கதவுக்கு அருகில் ஒரு பயணி பாதுகாப்பு அதிகாரி ஒருவரை எட்டி உதைத்துள்ளதுடன் அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து, பயணிகள், மது போதையில் இருந்த பயணிகளை பிடித்து ரயில்வே பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வெயங்கொட பொலிஸ் பிரிவின் வந்துரவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு அதிகாரியின் உடல் வந்துரவ ரயில் நிலையத்தில் இருந்து மீரிகம திசையில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவதுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 31 மற்றும் 23 வயதானவர்கள் எனவும் இவர்கள் நொச்சியாகம மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களை சேர்நதவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தே நபர்கள் மீரிகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்னர். சம்பவம் குறித்து வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.