1.4 மில்லியன் ரூபாய் சம்பளம் பெறும் அமைச்சின் செயலாளர் - சிங்கள ஊடகம் தகவல்
சக்தி வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் அமைச்சுப் பதவி வகிக்கும் நாட்டின் முக்கிய அமைச்சின் செயலாளர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 1.4 மில்லியன் என தெரியவந்துள்ளது.
அத்துடன், மேலதிக நேர சம்பளத்திற்கு கூட அவர் தகுதியானவர் எனவும் அமைச்சின் செயலாளரின் பிரத்தியேக செயலாளரின் சம்பளம் 04 இலட்சம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சம்பந்தப்பட்ட செயலாளர் நிதித்துறையுடன் தொடர்புடைய முன்னணி நிறுவனமொன்றில் முன்னர் பணிபுரிந்தவர். அவரது தற்போதைய சம்பளம் அந்த நிறுவனத்தின் சம்பள அளவை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த செயலாளரின் பலம் வாய்ந்த அமைச்சரும் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான சம்பளத்தையே பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை வெளியிடும் அமைச்சர்
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இவ்வேளையில் அரச உத்தியோகத்தர் ஒருவர் இலட்சக்கணக்கான ரூபா சம்பளம் பெறுவது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலாளரின் பலம் வாய்ந்த அமைச்சர் அவ்வப்போது பொதுச் செலவினங்களுக்காக மக்கள் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்குமாறும் தற்போதைய சூழ்நிலையில் மக்களைத் தியாகம் செய்யுமாறும் விசேட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.