பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வலிவடக்கு தையிட்டி விகாரைக்கு கலசம் வைப்பு! செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புத்த விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (27.04.2023) நடைபெற்ற கலசம் வைக்கும் நிகழ்வில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர் தாயகம் எங்கும் இலங்கை அரசாங்கம் புத்த விகாரைகளை அமைத்து தமிழரின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி, தமிழரின் இருப்பை முற்றுமுழுதாக இல்லாது செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், வடதாயகமான யாழின் நாவற்குழிப் பகுதியில் அண்மையில் ஒரு புத்த விகாரை அமைக்கப்பட்டு அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதேவேளை கச்சதீவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை குறித்த இடத்திலிருந்து அகற்றி விட்டதாக இலங்கை கடற்படை நேற்றைய தினம் யாழ். ஆயர் இல்லத்திற்கு அறிவித்திருந்தது.
ஆகவே நேற்றைய தினம் கச்சதீவிலிருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலை இன்று யாழில் பிரதிஷ்ட்டை செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழ் மக்களின் காணிகள் வலி வடக்கில் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை முற்று முழுதாக விடுவிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், இலங்கை படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் தமிழர் அடையாளங்களை அழித்து அங்கு பௌத்த சின்னங்களை உருவாக்கி பிரதிஷ்ட்டை செய்யும் செய்பாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.