கிண்ணியா பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது முறையாகவும் தோற்கடிப்பு (Photo)
கிண்ணியா பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்தில் உள்ள கிண்ணியா பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (24) இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹாரினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று(24) முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 16 பேர் கொண்ட இந்த சபையில் 15 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். இதில் 7 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 8 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இவர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்து மூன்று உறுப்பினர்களும், இலங்கை சுதந்திரக் கட்சி இரு உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்களும், என்.எப்.ஜி.ஜி கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒரு உறுப்பினரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இது குறித்து வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் A.S.நஸீர் கருத்துத் தெரிவிக்கும் போது,
கடந்த காலங்களில் சபையினுடைய அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளுக்காக உறுப்பினர்களுக்கு சமமான முறையில் நிதி ஒதுக்கப் படவில்லை. மாறாக குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உறுப்பினர்கள் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில் காணப்பட்டனர்.
அதே சமயம் கடந்த காலங்களில் சபையில் முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதற்கு நாங்கள் பலமுறை கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வந்தோம்.
தற்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை வெற்றி கொள்ளுவதற்காக வீடுகளுக்குச் சென்று இலஞ்சம் பேரம் பேச பட்டதாகவும் எங்கள் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தும் இந்தப் பேரம் பேச்சுக்காக எங்களுடைய உறுப்பினர்கள் எவரும் அசத்தியத்தின் வழியில் செல்லவில்லை.
எதிர்காலத்தில் வருகின்ற வரவு செலவுத்திட்டம் அது மக்களுடைய வரவு செலவுத் திட்டமாக இருக்கும். எந்த கட்டத்திலும் அது அரசியல் பயன்படுத்தப்படமாட்டாது. அது மக்களுக்கான வரவு செலவுத் திட்டமாக இருக்கும்.அதே போன்று மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடிய வரவு செலவுத் திட்டமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
