முல்லைத்தீவில் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கப் புதையலை தேடி தேடுதல் நடவடிக்கை
இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தைத் தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற இடமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சுதந்திரபுரம் பகுதியில் புதையலைத் தேடி அகழ்வு நடவடிக்கை இன்றையதினம்(02) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று மாலை(02) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமையத் தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுகளின் செயலாளர்கள் இருவர் இரகசியமாகத் தோண்டி எடுக்க முயன்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இன்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தை முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 25ம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை இன்றையதினம் (02) வரையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே ஏற்கனவே நீதிமன்றம் குறிப்பிட்ட திகதியான இன்றையதினம் மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அகழ்வு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றதோடு குறித்த குழிகள் 05 அடிக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட குழிகளாகவும் காணப்படுவதோடு நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.
முதற்கட்டமாகக் குழிகளில் உள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதோடு, தொடர்ந்து இயந்திரங்களைக் கொண்டு அகழும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அகழ்வு நடவடிக்கை இடம்பெறும் இடத்தில் பொலிஸார் , விசேட அதிரடிப் படையினர் , இராணுவத்தினர், புலனாய்வாளர்கள், உள்ளிட்ட தரப்புகள் பிரசன்னமாகியிருந்த நிலையிலேயே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்(Douglas Devananda) செயலாளர்கள் இருவர் இந்த தங்கத்தை முன்கூட்டியே தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதற்காகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டுக்கே சென்று உதவி கோரப்பட்ட போதிலும் அதற்கு அவர் இணங்க மறுத்துள்ளார்.
நீதிமன்றில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25ம் திகதிக்கு முன்னதாக
இரகசியமாகத் தங்கத்தைத் தோண்டி எடுக்க உதவுமாறும் கோரியுள்ளனர்.எனினும் இந்தக்
கோரிக்கையை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்துள்ளார் என ஏற்கனவே
செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
