திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை
திருகோணமலைப் பிராந்திய சுகாதார வைத்திய அலுவலகத்தின் அனுசரணையுடன், கந்தளாய் பிரதேச சுகாதார வைத்திய அலுவலகம் முன்னெடுத்த மூன்று நாள் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் 21, 22, மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
கந்தளாய், வான எல, ரஜ எல, அக்போபுர, மற்றும் கந்தலாவே ஆகிய பிரதேசங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பான உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பரிசோதனையின்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையில் உணவு தயாரித்தல் மற்றும் உணவு கையாளும் முறைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு
அத்துடன், பின்வரும் முக்கிய குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன: உணவுத் தயாரிப்புக் கடைகளில் மலசலக் கூட வசதிகள் இல்லாமை. உணவுத் தயாரிப்புக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லாமை. சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், சட்டரீதியான அனுமதி பெறாமலும் பல கடைகள் இயங்கி வருதல். குறைபாடுகள் கண்டறியப்பட்ட உரிய கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இறைச்சிக் கடைகளில் புகைப்பிடித்தலைத் தடை செய்தல் மற்றும் மாட்டு இறைச்சியை மேசை போன்ற உயரமான தளங்களில் வைத்து விற்பனை செய்தல் போன்ற சுகாதார நடைமுறைகளை ஒரு வார காலத்திற்குள் அமுல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.நஸீர் அகமட் தலைமையில் இந்தக் குறைபாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கு பிரதேச சபையின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |