உக்ரேனிய நிறுவனத்துடன் இணைந்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கை
கொழும்பு — இலங்கை மீதான தனது நீண்டகால பொருளாதார நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், IOTC குழுமம் ஒரே ஆண்டிற்குள் நாட்டில் இரண்டு பிரதான முதலீடுகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய WEAIR நிறுவனத்தின் விமான சேவைப் பிரிவில் 27 மில்லியன் அமெரிக்க டொலர்களும், Aureum நிறுவனத்தில் 10 மில்லியன் யூரோக்களும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச வணிக ரீதியிலான வான்வழிச் சரக்குச் சேவையைத் தொடங்குவதற்கான முக்கிய கட்டத்தை WEAIR எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் (CAASL) WEAIR இன் சர்வதேச விமான இயக்க பங்காளருக்கு 'வெளிநாட்டு விமான இயக்குனருக்கான சான்றிதழ்' (FAOC) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இச்சான்றிதழை சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, IOTC குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் WEAIR நிறுவனத்தின் இயக்குநருமான தினேஷ் கணேசகுமாரனிடம் கையளித்தார்.
முக்கிய திட்டம்
தனது வர்த்தக நடவடிக்கைகளின் தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, சரக்கு விற்பனை, சரக்கு அனுப்புனர் தொடர்புகள் மற்றும் சந்தை மேம்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக WEAIR நிறுவனம் EAM நிறுவனத்தை தனது முதன்மை விற்பனை மற்றும் சேவை முகவராக (GSSA) நியமித்துள்ளது.

இந்நிகழ்வின் போது, இலங்கையின் வடக்கு பகுதி இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் விமானப் பயிற்சிப் பாடசாலை (flying school) ஒன்றை நிறுவுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன், IOTC நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை வரவேற்றுள்ள IOTC நிறுவனம், வர்த்தக ரீதியான சாத்தியக்கூறுகள் மற்றும் உரிய காலப்பகுதியில் பெறப்படும் ஒழுங்குமுறை அனுமதிப்பத்திரங்களுக்கு அமைவாக இந்த முதலீட்டை நேர்மறையாக பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
IOTC குழுமத்தின் முதலீடுகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, சர்வதேச இணைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக தினேஷ் கணேசகுமாரன் சுட்டிக்காட்டினார்.
WEAIR தற்போது தனது இறுதி வர்த்தக மற்றும் செயல்பாட்டுத் தயாரிப்புகளை முடிவடைத்து வரும் நிலையில், எஞ்சியுள்ள ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்தவுடன் விரைவில் தனது சர்வதேச சரக்கு சேவைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
YOU MAY LIKE THIS VIDEO