உடையார்கட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் வைப்பு
உடையார்கட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக 35,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் இயங்கிவரும் பிரபலமான உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட உணவு பொதியில் புழுக்கள் காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
சீல் வைப்பு
இதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகர்களால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு ஏற்ப உணவகத்தில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை குறித்த உணவகம் சீல் வைக்கப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக 35,000 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி அந்தபகுதியைச் சேர்ந்த நபர் மதிய உணவிற்காக ஐந்து பார்சல் உணவுகளை வாங்கிச் சென்று உணவை அவிழ்த்தபோது மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது வெளிப்பட்டுள்ளது.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர் சுகாதார பரிசோதகரிடம் உடனடியாக முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை ஆய்வு செய்தபோது, சுகாதார விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இதனையடுத்து உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் குழுவினர் சம்பவத்தை விசாரணை செய்து, உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்கள்.
அதற்கமைய நேற்றையதினம் (14.11.2025) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கானது எடுத்துகொள்ளப்பட்டதனை தொடர்ந்து உணவக உரிமையாளருக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன், குறித்த உணவகத்தினை சீல் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

அதற்கமைய இன்று மாலை உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் குறித்த உணவகத்திற்கு சென்று உணவகத்தின் திருத்த வேலைகள் நிறைவுபெறும் வரை உணவகத்தினை சீல் வைத்திருந்தனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் உணவு விற்பனையை மேற்கொள்ளும் எந்த நிலையத்திற்கும் எதிராகவும் எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



