மன்னாரில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட கடலட்டைகள் உயிருடன் மீட்பு (Photo)
மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து இன்று (03.08.2023) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணை
சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பல்லவராயன் கட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளும் கையளிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |