காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை சேவை மட்டுப்படுத்தப்பட்டதால் அப்பாதையை பயன்படுத்தும் பல தரப்பினரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அந்த பாதையை காரைநகர் பிரதேச சபையிடம் தந்தால் அதனை திறம்படச் செய்வோம் என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையில் நேற்று(14.02.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,“காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிக்கும் உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சரி பொதுமக்களாக இருந்தாலும் சரி தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
நிதி ஒதுக்கீடு இல்லை
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்படுகின்ற குறித்த கடற்பாதை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மண்ணெண்ணெய் இல்லாத காரணத்தால் இயங்காத நிலையில் காணப்பட்டது அதற்கான மண்ணெண்ணெயை நாங்கள் பெற்றுக் கொடுத்து பாதையை இயங்கச் செய்தோம்.
தற்போது மண்ணெண்ணெய் செலவிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் பாதை சேவையின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சேவை நடைபெறுகிறது.
இதனால் காரைநகரில் இருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் ஊர்காவற்துறையில் உள்ள நீதிமன்றம், பொலிஸ் நிலையம், வைத்தியசாலை மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு கடமைக்கு செல்லும் ஊழியர்களாக இருந்தாலும் சரி பொதுமக்களாக இருந்தாலும் சரி தனியார் படகுக்கு ஒரு வழிப் பயணத்திற்கு நூறு ரூபா கொடுத்து தமது வாகனங்களுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு கடமைக்கு செல்வார்களானால் அவர்களது சம்பளத்தில் இருந்து இருவழி பயணத்திற்கு 200 ரூபா செலவிடப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அவர்கள் சம்பள உயர்வும் இல்லாமல் அவஸ்தைப்படும் நிலையில் அவர்கள் தமது குடும்ப சுமையை எவ்வாறு சுமப்பார்கள் என சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த பாதையை இயக்குவதற்கு நாங்கள் (04.10.2022) அன்று நடைபெற்ற விசேட கூட்டத்திலே 58ஆவது இலக்க தீர்மானம் மூலம் எமது சபையிடம் அந்த. பாதையை ஒப்படைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கியிருந்தோம்.
ஆனால் அவர்கள் எமக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை.
இந்த பாதையை எம்மிடம் வழங்கினால் சிறப்பான சேவையை எம்மால் வழங்க முடியும். அதுமட்டுமன்றி நிதிப் பிரச்சினை ஏற்படும்போது புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற உறவுகளிடமும் எமது பகுதிகளில் வாழ்கின்ற செல்வந்தர்களிடமும் நிதியை பெற்று சிறப்புடன் சேவையை வழங்க முடியும்.”என கூறியுள்ளார்.