தனிநாடு கோரவுள்ள ஸ்காட்லாந்து - உடைக்கப்படும் ஐக்கிய இராட்சியம்?!
"ஸ்காட்லாந்தின் மக்கள் முன் மீண்டும் தனி நாட்டுக்கான சுதந்திர வாக்கெடுப்பை முன்வைப்போம், தனிநாடு எமது மக்களின் கோரிக்கை! ஸ்காட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய ஒரே மக்கள் ஸ்காட்லாந்தின் மக்களே, எந்த வெஸ்ட்மின்ஸ்டர் (இங்கிலாந்து) அரசியல்வாதியும் எதிர்த்து நிற்க முடியாது" என ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) தலைவரும், மே 6 நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஸ்காட்லாந்தின் முதலமைச்சராக தெரிவாகியுள்ளவருமான நிக்கோலா ஸ்ரேஜன் (Nicola Sturgeon) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிக்கோலா ஸ்ரேஜன் மேலும் தெரிவிக்கையில், "இந்தத் தேர்தலின் முடிவைக் கருத்தில் கொண்டு, ஸ்காட்லாந்து மக்கள் தமது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை ஐக்கிய இராட்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) வழங்கவேண்டும், மாறாக தடுக்க முற்பட்டால் அது ஜனநாயகத்திற்கு துரோகம். அப்படி தடுக்க முனைந்தாலே ஸ்காட்லாந்து ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கு இது மிகவும் சக்திவாய்ந்த வாதமாக மாறும்" எனக் கூறியுள்ளார்.
நடைபெற்ற ஸ்காட்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) 64 இருக்கைகளை வென்றெடுத்து மீண்டும் ஆட்சியமைக்கும் அதிகாரத்தினை வென்றுள்ளது. ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களில் வென்று 19 ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2014 இல் நடைபெற்ற தனிநாட்டுக்கான சுதந்திர வாக்கெடுபில் 55% : 45% ஆக ஐக்கிய இராட்சியமாக இணைந்திருப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்த நிலையில் மீண்டும் ஒரு தனிநாடு வாக்கெடுப்புக்கு ஐக்கிய இராட்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் முற்றாக மறுப்புத் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய ஆட்சிபீடங்கள் இணைந்து ஐக்கிய இராட்சியம் (United Kingdom) ஆக உருவாகி 314 ஆண்டுகள் கடந்துள்ளநிலையில், ஸ்காட்லாந்தின் தனி நாட்டுக்கோரிக்கை ஐக்கிய இராட்சியத்தின் உடைவாக இருக்குமோ என்ற கேள்வி அரசியல் அவதானிகள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.