ஸ்கொட்லாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா : சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவந்த 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஏழாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
பி குழுவில் இங்கிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் ஸ்கொட்லாந்தை 5 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டதை அடுத்து இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றில் விளையாடுவது உறுதியானது.
சென் லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் ஸ்கொட்லாந்தின் சவாலுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
எனினும், ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 13 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கையை 155 ஓட்டங்களாக உயர்த்தி ஐந்தாவதாக ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் டிம் டேவிட், மெத்யூ வேட் ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
ஜோர்ஜ் மன்சே, ப்றெண்டன் மெக்முலன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். தொடர்ந்து அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்தார்.
அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று அதிகாலை சீரற்ற காலநிலை காரணமாக 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நமிபியாவை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் இங்கிலாந்து 41 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து, நான்கு துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 4 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைக் குவித்தது. திருத்தப்பட்ட 126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இது இவ்வாறிருக்க, பாகிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் ப்ளோரிடா, லௌடர்ஹில் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியுடன் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவுக்கு வருகிறது.
எஞ்சிய முதல் சுற்று போட்டிகள், சுப்பர் 8 சுற்று, மற்றும் இறுதிச் சுற்று என்பன மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.
இதுவரை இந்தியா, ஐக்கிய அமெரிக்கா (ஏ குழு), அவுஸ்திரேலியா, இங்கிலாந்து (பி குழு), ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் (சி குழு), தென் ஆபிரிக்கா (டி குழு) ஆகிய ஏழு அணிகள் சுப்பர் 8 றில் விளையாட தகுதிபெற்றுள்ளன. கடைசி அணியாக பங்களாதேஷ் அல்லது நெதர்லாந்து டி குழுவிலிருந்து தெரிவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |