பிரித்தானியாவில் மீள திறக்கப்படும் பாடசாலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எந்தவொரு மாணவர்களின் வாய்ப்பும் கோவிட் - 19 தொற்று நோயால் பாதிக்கப்பட கூடாது என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கல்விச் செயலாளர் கெவின் வில்லியம்சன் இவ்வாறு கூறியுள்ளார். டவுனிங் வீதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, பிரித்தானியாவில் மாணவர்கள் தவறவிட்ட கற்றல் நடவடிக்கைகளை மீளவும் தொடர்வதற்கு உதவுவதற்காக 700 மில்லியன் பவுண்ஸ் நிதியுதவி திட்டம் குறித்து அவர் அறிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எந்தவொரு மாணவர்களும் தொற்று நோயால் அவர்களின் நம்பிக்கையை இழக்கக்கூடாது, இது நடக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு தரங்களை தீர்மானிப்பதில் "எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தவில்லை" என குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கம் ஆசிரியர்களை மிகவும் நம்புகிறது எனவும் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படும் என்பதை பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட் -19 தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 9,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 442 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 4,144,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 121,747 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,356,364 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,273 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவில் கோவிட் -19 தடுப்பூசியில் முதல் டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கையும் 18,242,873 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 669,105 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.