பிரித்தானியாவில் நாளை முதல் திறக்கப்படும் பாடசாலைகள்! - பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் நாளை முதல் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளன. அரசாங்கம் அறிவித்துள்ள திட்டத்தின் படி நாளைய தினம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்த பொது மக்கள் மேற்கொண்ட முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமானதாக பிரித்தானிய பிரிதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இதன்படி, கோவிட் - 19 கட்டுப்பாடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வருவதற்கான திட்டத்தின் (Roadmap) முதல் படியாக நாளைய தினம் அமையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஏனைய கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படவுள்ளன. ஜூன் 21ம் திகதிக்கு முன்னர் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவது குறித்து அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
“பாடசாலைகள் மீளவும் திறப்பது கோவிட் - 19 வைரஸ் தொற்றை வெற்றிகொள்வதற்கான ஒரு உண்மையான தேசிய முயற்சியைக் குறிக்கிறது” என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு நபர்களினதும் உறுதியால் தான் நாம் ஒரு இயல்பான உணர்வுக்கு நெருக்கமாக செல்ல ஆரம்பிக்க முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றுவதால், பொதுமக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,177 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி இதுவரை அங்கு 4,218,520 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.