இன்று முதல் மீளவும் பாடசாலைகள் ஆரம்பம்! வடக்கில் மாணவர்களின் வருகை குறைவு
நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுகின்றன.
இது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் பரவல் காரணமாக நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாட்டில் கோவிட் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, இன்று முதல் 4 கட்டங்களாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
அந்த வகையில், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.
இதனிடையே, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.
முச்சக்கரவண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும், அதேபோன்று வானில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், இந்த எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருப்பது கட்டாயமாகும். இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதேவேளை, இதேவேளை, சம்பள முரண்பாட்டு பிரச்சினை போராட்டம் காரணமாக, இன்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அந்த முன்னணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
மன்னார் மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீண்ட இடைவெளியின் பின்னர் பாடசாலை ஆரம்பித்துள்ள நிலையிலும் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் செய்திகள் - ஆஸிக்
வவுனியா
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை காணப்படுவதாக தெரியவருகிறது.
வவுனியாவில் இன்றைய தினம் 85 பாடசாலைகள் திறக்கப்படும் என வலயக்கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்ற போதும் இன்று காலை பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ள நிலையில், ஏனைய சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்ற போதிலும் குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தின் பிரதான வாயில்
பூட்டு பெற்றோரால் உடைக்கப்பட்டு வருகை தந்த மாணவர்கள் உட் செல்ல
அனுமதிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டதுடன் பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமை தொடர்பில்
அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தாக சுட்டிக்காட்டினார்.
வவுனியா செய்திகள் - தீசன், திலீபன்
ஹட்டன்
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 200இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ் மொழிமூல பாடசாலைகள் 53, சிங்கள மொழி மூல பாடசாலைகள் 21 என மொத்தம் 74 பாடசாலைகளை இன்று திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஒரு சில பாடசாலைகளில் அதிபரும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களும் மாத்திரம் சமூகமளித்திருந்த நிலையில் ஏனைய சில பாடசாலைகளில் அதிபர் மற்றும் ஓரிரு ஆசிரியர்களும், மாணவர்களும் சமூகமளித்திருந்ததாக தெரியவருகிறது.
எனினும் ஒரு சில பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என எவருமே சமூகமளிக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை மலையக பகுதிகளில் சுமார் 20 வீதமான பாடசாலைகளே திறக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் செய்திகள் - சுந்தரலிங்கம், திருமால்
திருகோணமலை
திருகோணமலையின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் குறைந்தளவிலான மாணவர்களுடன் கற்றல் செயற்பாடுகள் இன்று நடைபெற்றுள்ளன.
அத்துடன் சில பாடசாலைகளில் குறைந்தளவிலான ஆசிரியர்களே சமூகமளித்திருந்ததாகவும் தெரியவருகிறது.
திருகோணமலை செய்திகள் - முபாரக்