முல்லைத்தீவில் பாடசாலை வகுப்பறைக்குள் தண்ணீர்: சிரமத்தில் மாணவர்கள்
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் புகுந்துள்ள நீரினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் சுற்றுச் சூழல் முழுவதும் சதுப்பு நிலமாக இருப்பதால் ஊறிப்பாயும் நீர் வகுப்பறைகளுக்குள் புகுந்துள்ளது.
தரம் 5 வரையுள்ள, திறமையான கல்வி வெளிப்பாடுகளை கடந்த காலத்திலிருந்து காட்டி வரும் இப்பாடசாலை, ஊறிப் பாயும் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்கு இதுவரை நடவடிக்கைகளை முன்னெடுக்காதது கவலையளிக்கும் விடயமாகும்.
தரம் 1 மாணவர்கள்
தரம் 1 முதல் தரம் 4 வரையான வகுப்புக்களை கொண்ட கட்டடம், ஊற்று நீரினால் பாரியளவிலான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளது.
தரம் 1 வகுப்பறை மற்றும் தரம் 2 வகுப்பறைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டடத்தில் இப்போது தரம் 3,4 மாணவர்களின் வகுப்பறைகள் மட்டுமே இயங்கு நிலையில் பயன்பட்டு வருவதனை அவதானிக்கலாம்.
இந்த வகுப்பறைகளுக்குள் மூன்று சென்ரி மீற்றர் உயரத்திற்கு நீர் தேங்கி இருப்பதை வகுப்பறைகளை பார்வையிட்டதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
சதுப்பு நிலச் சூழல்
பாடசாலையில் பயன்பாட்டில் உள்ள மூன்று பிரதான கட்டடங்களையும் சூழ சதுப்பு நிலமாக இருப்பதை காணலாம்.
கடும் கோடை காலத்திலேயே இப்பகுதிகள் காய்ந்து கடாராக இருப்பதையும் மழைக்காலங்களில் கால்களை வைத்தால் புதையும் நிலமாகவும் இருப்பதாக இப்பாடசாலையின் பெற்றோர்கள் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
பாடசாலையின் மைதானத்தில் உள்ள கொடிக்கம்ப மேடையினை கடந்து குப்பைகளை கொட்டும் இடத்திற்கு செல்ல வேண்டும். இதுவே வழமையான நடைமுறையாகவும் இருந்து வருகின்றது.
ஆனாலும், பாடசாலை மைதானமும் நீர் முட்டி ஊறிப் பாய்ந்து கொண்டிருப்பதால் சதுப்பாக இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
அவதானிக்கப்பட்ட நாட்களில் மாணவச் சிறார்கள் அச்சதுப்பு நில பகுதியூடாகவே நடந்து சென்று குப்பைகளை கொட்டிவிட்டு திரும்புவதை காண முடிந்தது.
சிறுவர் நலன் நிறுவனங்கள்
சிறுவர் நலன் தொடர்பில் அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் அமைப்புக்கள் இது தொடர்பில் ஏன் இதுவரையும் கண்டு கொள்ளாது இருக்கின்றனர் என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.
ஆரம்பப் பிரிவு பாடசாலையாக இருக்கும் இப்பாடசாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் வலயக்கல்வி அலுவலகம் முல்லைத்தீவுக்கு அண்மையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகம், படித்த மனிதர்களால் நிரம்பிய முல்லைத்தீவில் உள்ள பிரதான இடங்களில் ஒன்றில் அமைந்திருக்கும் இப்பாடசாலையில் தற்போதைய நிலை தொடர்பில் நேரடி களப்பயணமொன்றை கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாக அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது.
இது எதிர்காலத்தில் இப்பாடசாலையின் பிரபலமான வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
