முல்லைத்தீவில் கற்றல் கற்பித்தலில் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் பாடசாலை! எழுந்துள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவிலுள்ள (Mullaitivu) பாடசாலையொன்றில் வளப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் வினைத்திறனான செயற்பாடுகள் மிகையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப் பகுதி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டுவரும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாடசாலையின் வளப்பற்றாக்குறைக்கு உரிய அதிகாரிகளின் அக்கறையின்மையே காரணம் என தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு இலகுவான கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதற்காக பாரியளவிலான சவால்களை அப்பாடசாலையின் ஆசிரியர்கள் எதிர்கொள்ள நேரிடுவதாக மாணவரிடையே மேற்கொண்ட ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
வகுப்பறைகள் பற்றாக்குறை
இன்றைய மாணவர்கள் நாட்டின் நாளைய தலைவர்கள் என்பது கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் விடயத்தில் எப்படி நோக்க முடியும் என்றும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உயர்தரம் வரையிலான வகுப்புக்களை கொண்டு இயங்கி வரும் பாடசாலையாக கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது.
300 வரையிலான மாணவர்கள் கற்றலில் ஈடுபடும் அந்த பாடசாலையில் கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய மூன்று கிராமங்களையும் சேர்ந்த ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் கற்றலுக்கான பிரதான உயர்தரப் பாடசாலையாக இது அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாடசாலையின் வகுப்பறைகள் தேவையான அளவிலும் குறைவாகவே இருப்பதாக பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபட்டுவரும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
தகரக் கொட்டில்கள்
உயர்தர மாணவர்களின் பாடப்பிரிவுகளுக்குரிய கற்பித்தலை செய்து கொள்வதற்காக தகரக் கொட்டில்களே வகுப்பறைகளாக பயன்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலையின் சிற்றுண்டி விற்பனை நிலையமாக இயங்கி வந்த மற்றொரு தகரக் கொட்டிலும் இப்போது பாடப்பிரிவுகளுக்கான கற்பித்தலை மேற்கொள்ள வகுப்பறையாக பயன்பட்டு வருவதாகவும் சிற்றுண்டிச்சாலை இப்போது இயங்குவதில்லை எனவும் உயர்தர மாணவன் ஒருவருடன் மேற்கொள்ள முடிந்த உரையாடலின் போது அறிய முடிந்தது.
இந்நிலையில், வகுப்பறையாக பயன்படுத்தப்பட்டு வந்த தகரக்கொட்டில் ஒன்று இப்போது இரண்டாக பிரிக்கப்பட்டு இரு வகுப்பறைகளாக பயன்படுத்தப்படுவதாகவும் அந்த மாணவன் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இது போன்றே அழகியல் கற்கைகளுக்கான வகுப்பறைகளுக்கும் வசதிகள் குறைவாகவே இருப்பதாகவும் பாடசாலைச் சமூகம் சார்ந்த ஒருவரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதான மண்டபத்தின் அமைவிடம்
பாடசாலையின் பிரதான மண்டபமாக வேலும் மயிலும் மண்டபம் அமைந்துள்ளதுள்ளதுடன் இது பாடசாலையின் பிரதான கட்டடத்தொகுதியில் இரண்டாவது தளத்தில் இருக்கின்றது.
பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக பிரதான மண்டபத்தினை ஆயத்தம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கதிரைகளை கீழ்த்தளத்தில் உள்ள வகுப்பறைகளில் இருந்து மேலே கொண்டு செல்ல வேண்டும். பின்னர் நிகழ்வுகள் முடிந்ததும் அவற்றை கீழ் தளத்தில் உள்ள வகுப்பறைக்கு கொண்டுவர வேண்டும்.
எனவே, இந்த செயற்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. வளங்களை சரிவர பேணிக் கொண்டால் இந்த சிரமம் இருக்காது என இது தொடர்பில் எடுத்துரைத்த சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக் காட்டுகின்றார்.
மண்டபத்திற்கென ஒரு தொகுதி கதிரைகள் இருக்குமெனின் நிகழ்வுகளுக்காக அல்லது ஒன்று கூடல்களின் போதும் கருத்தரங்குகளின் போதும் மண்டபத்தினை விரைவாக தயார் செய்துகொள்ள முடிவதோடு மாணவர்களுக்கு ஏற்படும் புதிய நெருக்கடியும் தவிர்க்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், கல்வித் திணைக்களத்தினூடாக இதற்கான கதிரைகள் கிடைக்கப்பெறப் போவதில்லை. ஆயினும் தன்னார்வலர்களின் முயற்சியினால் கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தின் தேவைக்கென ஒரு தொகுதி கதிரைகளை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கலாம் என அவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
அதேவேளை, முல்லைத்தீவு நகரில் இருந்து 26 கிலோமீற்றர் தொலைவில் கொக்கிளாய் முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள பாடசாலை தான் கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம்.
இப்பாடசாலையில் ஆசிரியர்களாக கடமையாற்றும் பல ஆசிரியர்கள் தூர இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
சிலர் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் முள்ளிவளை, முல்லைத்தீவு போன்ற கொக்குத்தொடுவாயில் இருந்தும் அதிக தூரத்தில் உள்ள இடங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தினமும் வந்து செல்லும் ஆசிரியர்களுக்கு பயணக்களைப்பு என்பது ஒருபுறமிருக்க, உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியவில்லை என்பது மற்றொரு பிரச்சினையாக இருக்கின்றது.
மேலும், பேருந்தில் வந்து செல்லும் ஆசிரியர்கள் காலை ஆறு மணிக்கெல்லாம் பேருந்தில் தங்கள் பயணத்தை ஆரம்பித்து காலை 8.30 மணியளவில் தான் பாடசாலையை வந்தடைய முடிகின்றது. அதுவும் சில நேரங்களில் பேருந்து தாமதமாக வரலாம். அல்லது பேருந்து வராமல் கூட விடலாம். இப்படி பல தடவை பெரும் சவால்களை தாம் எதிர்கொண்டிருந்ததாக இது தொடர்பில் பேருந்துப் பயணங்களினூடாக பாடசாலை சென்று வரும் ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
குறைபாடுகளை ஆராய்தல்
ஆசிரியர்கள் தங்கும் விடுதிகள் எவையும் பாடசாலைக்கென இல்லை. அவ்வாறு இருக்கும் போது தினமும் பயணம் செய்து கொள்வதைத் தவிர்க்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாடசாலையின் தங்கும் விடுதி தொடர்பாக பேசிய ஆர்வலர் ஒருவர் ஆசிரியர் விடுதிகளை அமைப்பதில் கல்வித்திணைக்களங்களே கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் நிலவி வரும் கற்றல் கற்பித்தலுக்கு இடையூறாக அமையும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து கொள்வதற்கும் அவற்றைப் படிப்படியாக நிவர்த்தி செய்து கொடுப்பதற்கு முயற்சிக்கப்பட வேண்டும்.
பாடசாலை மீது அக்கறையுடன் செயற்பட்டு வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புக்களோடு இணைந்து பாடசாலை நிர்வாகமும் வலயக்கல்விப் பணிமனை மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து செயலாற்றும் போது குறுகிய காலத்தினுள் பாடசாலையின் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு விடும்.
அத்தகைய செயற்பாடுகள் பாடசாலையில் கற்றல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கும் கற்பித்தலில் ஈடுபட்டுவரும் ஆசிரிய சமூகத்திற்கும் பெரும் நன்மை பயப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |