பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கட்கிழமை(02.01.2023) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் இன்று வரை (01.01.2023) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 2ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை விபரங்கள்
இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 2022ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் 2023 மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பெப்ரவரி 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இப்பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் மார்ச் 1ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.