வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவியின் சடலம்
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தக பிரிவு 2025இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக்கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்ர்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










