கிளிநொச்சி - முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் பதக்கம் வென்று சாதனை
தற்போது நடைபெற்றுவரும் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பூநகரி முழங்காவில் மகா வித்தியாலயம் பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனைப்படைத்துள்ளது.
மாகாண மட்ட 800 மீட்டர், 1500 மீட்டர் 5000 மீட்டர் ,அரை மரதன் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி நான்கு போட்டிகளிலும் முதலிடம் பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவாகிய சுமன் கீரன், தேசிய மட்டத்தில் அரை மரதன் போட்டியில் இரண்டாம் இடத்தையும் 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தாய்மண்ணான பூநகரிக்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் புகழ்சேர்த்துள்ளனர்.
மேலும், மாகாணமட்ட அரை மரதன் போட்டியில் மூன்றாம் இடத்தையும் மாகாணமட்ட 3000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த கிருச்ணமூர்த்தி மகீசன், தேசிய மட்ட அரை மரதன் போட்டியில் 13ஆம் இடத்தை பெற்றிருந்தார்.
பயிற்றுவிப்பாளர்களின் செயற்பாடு
அத்துடன் கமலேசுவரன் அனுசியா மாகாணமட்ட ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி இருந்ததோடு, சாந்தரூபன் பிரிந்தகி மாகாணமட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றிருந்தார் .
குறித்த மாணவர்கள் நால்வரையும் பயிற்சிகள் மற்றும் பங்குபற்றல் ஒழுங்குகளை விளையாட்டு பொறுப்பாசிரியர் றொசுகோ செயல்படுத்தியதோடு, இவர்களுக்கான பயிற்சிகளை பயிற்றுவிப்பாளர் எடிசன் உடற்கல்வி ஆசிரியர்களான கமலினி, சுதர்சிகா ஆகியோர் வழங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
பூநகரி சுமன் கீரன் இதற்கு முன்னரும் அகில இலங்கையில் 10.000 மீற்றர் நீண்ட தூர ஓட்டத்தில் (மரதன்) முதலாம் இடத்தையும், 5 000 மீற்றர் நீண்ட தூர ஓட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
சுமன் கீரன் அவர்களுக்கு சுவிற்சர்லாந்தின் பேரண் வள்ளுவன் பள்ளி முதல்வர் பூநகரி பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி சிறப்பித்ததோடு. தனது மணிவிழா அன்று பூநகரிப்புகழ் விருது வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |