ஸ்கார்பரோ மைய நிலையத்தில் கட்டுமான வேலைகள் ஆரம்பம்
5.5 பில்லியன் டொலர்களுக்கான முதல் புதிய மூன்று நிலக்கீழ்த் தொடரி வழித்தட நிறுத்தங்களுக்கான விரிவாக்கத் திட்டத்தின்படி ஒன்ராறியோ அரசு அதிகாரப்பூர்வமாக ஸ்காபரோ மத்திய நிலையக் கட்டுமானத்தினைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டம் முடிவடைந்தவுடன், வழித்தடம் 2ஆனது 7.8 கிலோமீற்றராக நீட்டிக்கப்பட்டு 105,000இற்கும் மேற்பட்ட அன்றாட பாவனையாளர்கள் பயன்பெறுவதுடன், 38,000 பயணிகள் அவர்கள் இருப்பிடத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திற்குள் போக்குவரத்து வசதியை அளிக்கும்.
திருப்புமுனை
"ஸ்கார்பரோ நிலக்கீழ் வழித்தட நீட்டிப்பின் மூலம் பொதுமக்களுக்கும், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் எமது அரசு கனேடிய வரலாற்றில் மாபெரும் போக்குவரத்து விரிவாக்கத்தை அளிப்பது ஒரு திருப்புமுனையாகும்" என அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.
ஸ்கார்பரோ மத்திய நிலையம், போக்குவரத்து நெரிசல் வேளைகளில் 10,000க்கும் மேற்பட்ட பயணிகளையும் 7,000 பயண இடைமாற்ற வசதிகளையும் அளிப்பதுடன், கட்டுமானத்தின்போது ஒவ்வோர் ஆண்டும் 3,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இத்திட்டம் ஸ்கார்பரோ சமூகம் நீண்ட காலமாகத் தேவைக்கு ஈடுகொடுக்கும் நவீன நம்பகமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதோடு ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் மக்களை இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




