திலினியிடம் சிக்கிய தென்னிலங்கை அரசியல்வாதிகள் - திரைமறைவில் தொடரும் மர்மம்
திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலிக்கு இலங்கை அரசியல்வாதிகள் குழுவொன்று பல கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அரசியல்வாதிகளில் எவரும் மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தது.
தொலைபேசியில் ரகசியம்
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், தமது திணைக்களப் பொறுப்பில் உள்ள சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பல ஒலிநாடாக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் WhatsApp செய்திகள் பலவற்றின் ஊடாக இது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் சந்தேக நபரான குறித்த பெண்ணுக்கு பணம் கொடுத்துவிட்டு திருப்பிக் கேட்கும் போது, அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் திலினி பதில் அளித்து பணம் கொடுப்பதைத் தவிர்க்கும் செயற்பாடுகள் ஒலி நாடாக்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மறைக்கப்பட்ட உண்மை
இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போது கணக்கில் பணம் எதுவும் மீதம் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
உரிய பணம் எவ்வாறு பெறப்பட்டது? அந்த பணத்திற்கு என்ன நடந்தது? இந்தப் பணம் கருப்புப் பணமா என்பது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.