புதுக்குளம் பாடசாலையின் தேவைப்பாடுகளை நிறைவேற்ற பிரதி கல்வி அமைச்சரிடம் சத்தியலிங்கம் எம்.பி கோரிக்கை
புதுக்குளம் பாடசாலையின் தேவைப்பாடுகளை நிறைவேற்ற பிரதி கல்வி அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு பிரதி கல்வி அமைச்சர் மருத்துவர் மதுர செனவிரத்ன வருகை தந்திருந்தார்.
பாடசாலையின் பழைய மாணவர்கள் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் ஆகியோரும் குறித்த வருகை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடல்
பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. முக்கிய தேவைப்பாடுகள் குறித்து பாடசாலை அதிபர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இப்பாடசாலையானது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முக்கியமான பாடசாலை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கான பாடசாலையாகும். அதுமட்டுமல்லாது, வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஒரு வளநிலையமாகவும் இப்பாடசாலை பயன்படுகின்றது.
வலயமட்ட, மாகாணமட்ட போட்டிகள் இங்கு நடைபெறுகின்றது. எனவே, இப்பாடசாலையின் பெளதீக மற்றும் ஆளணி வளங்களை நிவர்த்தி செய்துதருமாறு தங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
குறிப்பாக பாடசாலையின் மைதான அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்தார்.



