தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இரகசியமாக மேற்கொள்ளவே கூடாது : சரத் வீரசேகர விசனம்
இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது, அதன் முழுமையான விவரங்களை நாடாளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் 38 வருடங்களுக்குப் பின்னரான இலங்கை விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில் மாணவர் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்புத் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
எனினும், கடந்த 2025 ஏப்ரல் 5ஆம் திகதி இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

இது குறித்து வினவியபோது, இந்தியாவின் அனுமதியின்றி அதனை வெளிப்படுத்த முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது.
இலங்கை மக்களுக்கு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த வெளிநாட்டின் அனுமதி ஏன் தேவைப்படுகின்றது? இந்தியா நட்பு நாடாக இருப்பினும், இலங்கையின் அரசமைப்பு விடயத்தில் 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் வடக்குக்கு அதிகாரங்களைப் பகிரவும் வெளிநாட்டு அரசு அழுத்தம் கொடுப்பது நாட்டின் இறையாண்மைக்குப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
கொழும்பு துறைமுகக் கப்பல் தளத்தின் 51 சதவீத பங்குகள் இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் இந்தியா - இலங்கை பாலம் தொடர்பான விடயங்கள் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் கவனமாக ஆராயப்பட வேண்டும்.

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் வாழ்வாதார மற்றும் எல்லைப் பிரச்சினைகளும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது உரிய முறையில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும்.
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து உடன்படிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26