கள்வர்களின் ஆட்சிக்கு மீண்டும் இடமில்லை! பொன்சேகா திட்டவட்டம்
கடந்த காலங்களில் நாட்டை நாசமாக்கிய கள்வர் கூட்டம், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்கக்கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒன்றிணைந்து கூட்டணி
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசை வீழ்த்துவதற்கு எதிரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. சில எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துப் பயணிக்கவுள்ளன என்றும் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, கள்வர்களின் கூட்டம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அனுமதிக்கப் போவதில்லை. நாட்டில் தற்போதுள்ள எதிரணிகளின் கூட்டணியானது கள்வர்களின் ஒன்றிணைவாகும்.

பழைய அரசியல் முன்னெடுப்பு
அதனால்தான் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தால் மற்றையவர்கள் கொதிக்கின்றனர். பழைய அரசியலை முன்னெடுப்பதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. இதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது. மக்களுக்காக அல்லாமல் தமக்காகவே அந்தத் தரப்புகள் அரசியல் நடத்துகின்றன என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |