சாந்தனிற்கான கடவுச்சீட்டை வாங்கிய பின் நேர்ந்த கதி! சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சி தகவல்
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தனின் வாழ்க்கை மிக துயரமானது என சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
32 ஆண்டுகளை சிறையில் உடல் ஆரோக்கியத்துடன் கழித்த சாந்தனால் சிறப்பு முகாமில் 1 ஆண்டுக்கு மேலாக இருக்க முடியவில்லை எனவும்,120 சதுர அடி இடத்தில் அடைக்கப்பட்டு கடும் வேதனையில் நாட்களை கழித்து வந்ததாகவும் சட்டத்தரணி கண்ணீருடன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாய் நாட்டிற்கு சென்று அம்மாவின் கையில் ஒருவேளை உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த சாந்தன், இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை பெற்று கடவுச்சீட்டை பெற்ற போது சுயநினைவினை இழந்துவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி
கடவுச்சீட்டு கிடைத்த உடன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை பெற்று டிக்கட்டினை பெற மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிய நிலையில், 26 ஆம் திகதி அவர் சுயநினைவினை இழந்து காணப்பட்டார்.
இதன்போது அவரின் உடல் மோசமானமையினால் முருகனின் கட்டாயத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயிரை காப்பாற்றி அவரை ஊரிற்கு அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
இதன் பின்னர் தம்பியை பார்த்து மகிழ்ச்சியிலிருந்த அவரை 28 ஆம் திகதி இரவு இலங்கைக்கு அனுப்ப பணம் கட்டப்பட்ட நிலையில் 27 ஆம் திகதி காலை உயிரிழந்துவிட்டார். அவரின் உயிரை காப்பாற்ற வைத்தியர்கள் எவ்வளவோ போராடியும் அவர் தாயின் கையில் ஒருவேளை உணவை கூட உண்ணாமல் இறந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |