சாந்தனின் இறுதி சடங்கு தொடர்பான அறிவித்தல் வெளியானது
சாந்தனின் உடல் கொழும்பில் அவரது உறவினர்களிடம் இன்று மாலை 5 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது.
சாந்தனின் உடலின் இறுதி அஞ்சலி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை எட்டு மணிக்கு அவரது உடல் வவுனியாவில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதியம் இரண்டு மணிக்கு அவரது ஊரில் இறுதி அஞ்சலிக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து திங்கட்கிழமை கல்லறையை நோக்கிய அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அஞ்சலி
மறைந்த சாந்தனின் உடல் நாளையதினம் 03.03.2024, மு.ப 11.00 மணிக்கு, கிளிநொச்சி டிப்போ ச்சந்திக்கு அருகில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சாந்தனின் உடல் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாந்தனின் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் பற்றிய தகவலை இரவு 8 மணிக்கு முன்னர் அறியத்தருகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலை உறவினர்களிடம் கையளிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாந்தனின் உடல் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்
உடலைக் கையளிப்பதில் தாமதம்
எனினும், இலங்கையில் வைத்து சாந்தனின் உடல் மீள் பிரேத பரிசோதனை செய்யும் பொருட்டு நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
இந்தநிலையில், சாந்தனின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி நீதிபதியின் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு அமைய அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு நீர்கொழும்பு நீதவான் இன்று காலை வரை (10.00 AM) சமூகமளிக்கவில்லை எனவும் அவர் வருகையின் பின்னரே பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது சாந்தனின் உடலை கையளிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்று மாலையளவில் பிரேத பரிசோதனைகள் முடிந்து சாந்தனின் உடல் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அங்கு மக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
பிரேத பரிசோதனைகளின் ஏற்பட்ட தாமதம் காரணமாக சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |