சாந்தன் மரணம் - இலங்கைத் தமிழரை வஞ்சித்த தமிழக அரசு: முன்னாள் தமிழக முதல்வர் கடும் விமர்சனம்
சென்னை - திருச்சி முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத் துறையையும் முதல்வரையும் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பிரபாகரனின் வயதான தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபொழுது விமானத்தில் இருந்து இறங்க விடாமல் திருப்பி அனுப்பியது அப்போதைய திமுக அரசும் மத்திய காங்கிரஸ் அரசும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை (2.3.2024) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சி
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் சாந்தன் ஆகியோர் (11.11.2022 ) அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்
திருச்சி முகாமில் அவர்கள், சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி நடைபயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமை அறையில், சிறை போலவே அடைக்கப்பட்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், கடந்த 28.2.2024 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானமற்ற திமுக அரசு
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது, ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு பிரபாகரன் வயதான தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக முதலில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது அப்போதைய மைனாரிட்டி திமுக அரசும், மத்திய காங்கிரஸ் அரசும்தான்.
அதேபோன்று இன்று, விடுதலை பெற்ற சாந்தனை காலத்தே வெளிநாடு செல்ல மத்திய அரசுடன் பேசி, உரிய அனுமதி வாங்கித் தராத காரணத்தால், இறுதிக் காலத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ முடியாமல் மரணமடைந்துள்ளதற்கு இந்த நிர்வாகத் திறனற்ற, மனிதாபிமானமற்ற திமுக அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.
இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், விடியா திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |