சந்நிதியான் ஆச்சிரமத்தின் 320ஆவது ஞானச்சுடர் சஞ்சிகை வெளியீடு
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 320 வெளியீடும், பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வுகள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் சிவநாதன் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் திருமுன்னிலையில் நடைபெற்றுள்ளன.
இதில் முதல் நிகழ்வாக பஞ்ச புராணம் ஓதப்பட்டதை தொடர்ந்து வெளியீட்டுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான இரா.சிறிநடராசா நிகழ்த்தியுள்ளார்.
பல்வேறு உதவிகள்
பின்னர், சிறப்புப் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் உதவித் திட்டங்களாக, யா/ அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மாணவர்களின் பரீட்சை தேவைகளுக்காக எழுதுபொருள் வகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், முல்லைத்தீவு - முல்லை இசைக்கலாலயத்துக்கான பிள்ளையார் சிலைக்கு தேவையான நிதியாக 25,000 ரூபா கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்திற்கு, மூளாய் பிரதேச பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரிசியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மலையகம் - பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தினுடைய மாணவி ஒருவரின் மேற்படிப்புக்காக ரூபா 50,000 நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் மற்றும் அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |