ஞானசார தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் சந்தியாவிற்கு கொலை மிரட்டல்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெனலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்து ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் பொலிஸ் திணைக்களம் தனது பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளுக்காக 2018 இல் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது, எனக் கூறி உயர் நீதிமன்றம் செப்டம்பர் 10 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய மேல்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் ஞானசார தேரர் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுத் தனது தண்டனைக் காலத்தை அனுபவித்து வருகிறார்.
ஞானசார தேரர் மீண்டும் சிறை சென்றதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் வாயிலாகத் தன் மீது கடுமையான வெறுப்புரைகளும் வசைபாடல்களும் பரப்பப்பட்டு வருவதாகச் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சந்தேகநபராக உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்குக் கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தியா எக்னலிகொடவின் தலையீட்டால் அப்பதவி உயர்வு நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த, "ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்" எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று, தனது சவப்பெட்டியின் நீள அகலங்களைக் கேட்டுத் தனக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
2016 ஜனவரி 25 அன்று ஹோமாகம நீதிமன்றில் பிரகீத் எக்னலிகொட வழக்கின் சந்தேகநபர்களான 6 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றிற்குள் புகுந்த ஞானசார தேரர் நீதிபதி மற்றும் அரசு சட்டத்தரணிகளை மிக மோசமான வார்த்தைகளால் ஏசியதுடன், சந்தியா எக்னலிகொடவையும் நேரடியாக அச்சுறுத்தினார்.
நீதிபதியை அவமதித்தமை மற்றும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது எனவும், மாறாக அவர் தீவிரவாதத்திற்கு எதிராகப் பேசியதற்காகச் சிறை செல்லவில்லை எனவும் சந்தியா எக்னலிகொட தெளிவுபடுத்தியுள்ளார்.
எந்தவொரு ஜனாதிபதியும் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு அவர் தண்டனைக் காலத்தில் குறைந்தபட்சம் முக்கால் பகுதியை அல்லது பாதியையாவது அனுபவிக்காமல் தன்னிச்சையாகப் பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது எனத் தற்போதைய மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam