அனோஜன் விடுதலைக்காக அரசின் அடுத்தக்கட்ட நகர்வு - சபையில் அவிழ்க்கப்பட்ட சட்டச்சிக்கல்கள்
சவுதி அரேபியாவில் விடுதலைக்காக போராடும் அனோஜன் விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கான இறுதி திகதி அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்னர் எமது சட்டக் குழுவினர் அங்குள்ள சட்ட நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளனர்.
அதன் பின்னரே, அரசத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் எமது மேன்முறையீட்டைத் தாக்கல் செய்யும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (07.10.2026) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்.
மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனோஜன் வழக்கில் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வரும் 17ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது, அதற்கு முன்னர் நாங்கள் கலந்துரையாடுவோம். இதனைத் தொடர்ந்து, 15 அல்லது 16ஆம் திகதிகளில் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.

தேவையான மேன்முறையீட்டு வழக்குகள் மற்றும் இதற்கு முன்னராக வழங்கப்பட்ட தீர்ப்புகளின் பிரதிகள் தன்னிடம் இருக்கும் நிலையில், அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் இதுவரையில் கிடைக்காத வேளையில், அவை கிடைத்தவுடன் அதையும் சபையில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம்.
மரண தண்டனையை குறைப்பது தொடர்பான நடவடிக்கை
ஏற்கனவே மேன்முறையீடு செய்வதற்கான திகதிக்கு ஒரு நாள் முன்பாக 23ஆம் திகதி தான் அரசத்தரப்பு தனது மேன்முறையீட்டைத் தாக்கல் செய்திருந்தது, 24ஆம் திகதி அரசத்தரப்பும் மேன்முறையீட்டைத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, இராஜதந்திரத் தலையீடு தொடர்பாக எமது பிரதிநிதிகள் குழுவை சவுதி அரேபியாவுக்கு அனுப்பவுள்ளோம். அதுவரையில் இந்த வழக்கு மற்றும் சட்ட நடவடிக்கைகளின் நிலைமையை வெளியில் கூற முடியாத நிலை உள்ளது.
மேன்முறையீட்டு நடவடிக்கையின் மூலம் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டால், அதன் பின்னர் மரண தண்டனையை குறைப்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு, தீர்மானிக்கப்படும்.
இதற்கிடையில், எமது மேன்முறையீட்டின் பிரதியும், அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டின் பிரதியும் இன்னும் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. பிரதிகள் கிடைத்தவுடன் அதுவும் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.