பிரகீத் எக்னெலிகொட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்! சந்தியா எக்னெலிகொட வெளியிட்ட தகவல்கள்..
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள் தொடர்பில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் துணைவியார் சந்தியா எக்னெலிகொட (Sandya Eknaligoda) ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 6000 நாட்களை நினைவு கூரும் நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
கோட்டாபய ராஜபக்சவின் குற்ற இராச்சியத்தின் செயற்படும் இயந்திரமாக இயங்கியவர்தான் சுரேஷ் சலே.இவை நீதிமன்றத்தின் ஊடாக வெளிவந்த உண்மையாகும்.
மைத்திரிபால சிறிசேன கொடுத்த அழுத்தம்
ஏனெனில், இந்த குற்றத்துடன் தொடர்புடைய தற்போது இருக்கும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் நாட்டை மீட்ட வீரர்கள் என்று அன்று ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மிகுந்த கவலையுடன் பேசி, பின்னர் அவர்களை வெளியேற்றினார்.
அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவிருந்த தகவல்கள் மூடி மறைக்கப்பட்டன. அவர்களை தடுப்புக் காவலில் இருந்து வெளியேற்றினார்.
தடுப்புக் காவல் உத்தரவுகளில் கையெழுத்திட அவர் மறுத்துவிட்டார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் முதலில் தங்களிடம் தகவல்கள் இல்லை என்று கூறினர்.

அதன் பிறகு, தகவல்கள் எரிந்துவிட்டதாகக் கூறினர். அதற்குப் பிறகு, அந்தத் தகவல்களை வழங்க முடியாது, அது தேசிய பாதுகாப்பிற்குப் அச்சுறுத்தல் என்று கூறினர்.
தற்போது கூட தேசிய பாதுகாப்பு பற்றிப் பேசப்படுகிறதுதானே? ஏனெனில் அவர்களிடம் இருக்கும் விடயங்கள் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினை, ஆனால் கேட்டது புலனாய்வாளர்கள் விடுமுறையில் சென்ற ஆவணங்கள்.
அது தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினை என்று கூறுகிறார்கள். இறுதியாக அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களும் பொய்யானது.
தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்
அக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக சுரேஷ் சலே நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். நீதிவான் தொடர்ச்சியாக சில ஆவணங்களை வழங்குமாறு கூறினார்.
இறுதியாக சுரேஷ் சலே மலேசியாவிற்கு சென்றார் என்று நினைக்கிறேன். நீதிமன்றத்திற்கு வர முடியாத காரணத்தினால்தான் அவ்வாறு சென்றார். ஏனெனில், ஆரம்பத்தில் அவர் நீதிமன்றத்திற்கு வருவதைத் தடுப்பதற்காகப் பல கதைகளைக் கூறினர்.

அவருக்காக முன்னிலையான சட்டத்தரணி, இவருடைய முகம் தெரிவது தேசிய பாதுகாப்பிற்குப் பெரிய பிரச்சினை என்றும், அதை மக்கள் பார்க்கக் கூடாது என்றும், அது பெரியதொரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறும் என்றும் கூறினார்.
எனவே, அவரை இரகசியமாக வைத்திருக்க வேண்டும், அவரை மறைத்து வைத்திருக்க வேண்டும், அதனால் அவரை வெளியே கொண்டுவர முடியாது, அவர் வருவதைத் தடுக்குமாறு கோரினர்.
இராணுவப் புலனாய்வு குழுவினர், இக்குற்றம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கோ அல்லது அறிந்த உண்மையை சொல்வதற்கு பதிலாக அவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தம் அல்லது உத்தரவின் பேரில் சாட்சிகளை அழிக்கும் வேலையையே செய்தார்கள்.