முல்லைத்தீவில் மணல் அகழ்வில் இடம்பெறும் ஊழல் - முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் பாரியளவில் மணல் அகழ்வதற்காக கனியவளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி இங்கு ஊழல் நடப்பதாக அகழ்வு ஒப்பந்ததாரரான மகாலிங்கம் தயாபரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடையார்கட்டு பாவடைக்கல்லாறு பகுதியில் மணல் அகழ்வதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களும் அனுமதி வழங்கிய போதும் கனியவளத்திணைக்களம் தனக்கான அனுமதியினை வழங்கவில்லை.
மணல் அகழ்வில் நடக்கும் ஊழல்
இதற்கு முன்னர் வேறு இடங்களில் தனக்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கனியவளத் திணைக்களத்தினால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமாகாண கனியவளத்திணைக்களத்தின் பணிப்பாளரின் உறவு முறையான ஒருவருக்கு உடையார்கட்டு பாவாடைக்கல்லாறு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில், பாவாடைக்கல்லாறு பகுதியில் இருந்து 500 டிப்பர் வரையான மணல்கள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 200 டிப்பர் மணல்கள் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.
இது போன்ற வியாபாரங்கள், சாதாரணவொரு ஒப்பந்ததாரரால் செய்யமுடியாத வேலையினை இந்த ஒப்பந்ததாரர் செய்வதற்கு கனியவளத்திணைக்களத்தின் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
செல்வாக்கின் அடிப்படையிலேயே, இங்கு மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. ஆற்றிலுள்ள மணலினை அகழ்ந்து ஏற்றிக்கொண்டு வந்து ஒரு இடத்தில் கொட்டுவதற்கு உழவு இயந்திரம் ஒன்றிற்கு இருபத்தி ஜந்தாயிரம் ரூபாவும், அந்த இடத்தில் இருந்து டிப்பருக்கு 60 - 65 ஆயிரம் வரையும் மணலுக்கான பெறுமதி கொடுக்கின்றார்.

மணலுக்கான ஒரு விலைக்காட்டுப்பாடு இங்கு இல்லை. இவ்வாறு உடையார் கட்டுகுளத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கு மணல் ஏற்ற செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் அங்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது கனியவளத்திணைக்கள அதிகாரியின் செல்வாக்கினை காட்டி நிக்கின்றது.
பொலிஸாரின் நடவடிக்கை
இதேவேளை, குறித்த மணல் அனுமதிப்பத்திரத்தினை வேறு மாவட்ட டிப்பர் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், நேற்றுமுன் தினம் (27.12.2025) கிளிநொச்சி கல்லாற்று பகுதியில் 4 டிப்பர்கள் இடம் மாறி மணல் ஏற்றியதற்காக பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று எங்களுக்கு நடந்திருந்தால், மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரத்தினை கனியவளத்திணைக்களத்தினர் இரத்து செய்துவிடுவார்கள்.

ஆனால் பணிப்பாளரின் உறவினர் என்ற காரணத்தினால் இதனை கண்டுகொள்ளதாக நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டுபகுதினை சேர்ந்த பலரின் பெயர்களின் மணல் அகழ்விற்கான அனுமதியினை பெற்று ஒரு தனிநபர் அனைத்தினையும் கையாண்டு மணல் வியாபாரத்தினை மேற்கொண்டு வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.