கனடாவின் பொருளாதார தடை எச்சரிக்கை: பதிலடி வழங்கியுள்ள இந்தியா
புதிய இணைப்பு
தற்போது ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகலை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடையை விதித்தாலும், அது இந்தியாவுக்கு உடனடியான பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இந்தியா அது தொடர்பில் கவலைப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வ தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கனடாவின் இந்த எச்சரிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள இந்திய தரப்பினர் இந்தியாவின் வர்த்தகத்தில் கனடாவின் பொருளாதாரத் தடை ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஏனெனில், 2023 - 24இல் கனடாவுடனான இருதரப்பு வர்த்தகம் 8.39 பில்லியன் டொலர்களாக இருந்தன. இது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாக இந்திய தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, பருப்பு வகைகள் மற்றும் உரங்கள் போன்றவை கனடாவில் இருந்து கணிசமான அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த இடைவெளியே ஏனைய நாடுகளை கொண்டு குறிப்பாக அவுஸ்திரேலியா, மியான்மர், மொசாம்பிக் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளை கொண்டு நிரப்பிவிடலாம் என்றும் இந்திய தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று, இந்திய வணிகங்கள், மாணவர்கள் மற்றும் பிற நாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு ஏராளமான ஏனைய வாய்ப்புக்கள் உள்ளன என்றும் இந்திய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டு 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள மருந்துகளை கனடாவுக்கு அனுப்பியிருந்தாலும், கனடாவின் எச்சரிக்கை இதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
ஏனெனில், இது 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான மொத்த ஏற்றுமதியில் அது ஒரு சிறிய பகுதியாகும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் உட்பட, நடவடிக்கைகள் யாவும் ஆலோசனையில் உள்ளதாக கனடா எச்சரித்துள்ளது. கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலியின் இந்த எச்சரிக்கையை அடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர பிளவு தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கடந்த திங்களன்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கு இடையில் பதற்றங்கள் அதிகரித்தன.
இந்தநிலையில், சம்பவத்தில் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கனடா குற்றம் சுமத்தியதை அடுத்து, இந்தியா, ஆறு கனேடிய இராஜதந்திரிகளை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.
அத்துடன், ஒட்டாவாவிலிருந்து ஐந்து இராஜதந்திரிகளுடன் தனது உயர்ஸ்தானிகரையும் திரும்ப அழைத்தது. இதற்கிடையில், நிஜ்ஜாரின் கொலை சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி குறித்த 6 பேரையும் நாட்டில் இருந்து வெளியேறுமாறு கனடா கேட்டுக்கொண்டது.
இந்தநிலையில், 2023ஆம் ஆண்டு ஜூனில் இடம்பெற்ற நிஜ்ஜார் கொலையில் இந்திய அரச முகவர்கள் ஈடுபட்டதாக ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்திய அதிகாரிகளை வெளியேற்றியதாக வெளியுறவு அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர விலக்கு மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டது. எனினும், இந்தியா அதற்கு மறுத்துவிட்டதாக ஜோலி கூறியுள்ளார்.
மேலும், வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் கிடைக்கக்கூடிய வலுவான நடவடிக்கைகளில் இராஜதந்திர வெளியேற்றங்களும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர் கனடா மேலும் நடவடிக்கைகளுக்கு தயாராகவே உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
அதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையே மக்கள் - மக்கள் உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை ஜோலி வலியுறுத்தியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கனேடியர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்கிறார்கள், மேலும் பல இந்தியர்கள் கனடாவுக்கு வருகிறார்கள்.
எனவே, கனடாவை பொறுத்தவரை இராஜதந்திர மோதலை விரும்பவில்லை. இந்தியாவும் இந்த விடயத்தில் ஒத்துழைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |