தமிழரசுக் கட்சியின் பலவீனம் தொடர்பாக எடுத்துரைத்த சம்பந்தன்
கட்சிக்குள் உள்ள போட்டிகள் கட்சியையும், உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (09.01.2024) நேரில் சந்தித்துப் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும்.
கட்சியை பலவீனப்படுத்தும் செயற்பாடு
அத்துடன், கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதே போன்ற நிலைமை தொடருவதோடு கட்சி தொடர்ந்தும் பலத்துடன் இருக்க வேண்டும்.
மேலும், கட்சிக்குள் போட்டிகள் வந்தால் அது கட்சியையும், உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும் எனவும் சம்பந்தன் கூறியுள்ளதாக சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் குழுக் கூட்டம்
அதற்கு முன்பதாகவே நேற்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் சிறீதரனை நேரில் சந்தித்துக் கட்சியின் ஒற்றுமைப் பயணம் தொடர்பில் சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், புதிய தலைவர் தெரிவு போட்டி இல்லாமல் நடைபெறும் நிலைமையை ஏற்படுத்த முடியாதா என்றும் சிறீதரனிடம் சம்பந்தன் வினவியுள்ளார்.
இதற்கு, நாளை நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுப்போம் என சிறீதரன் பதிலளித்துள்ளார் என தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |