வல்லாதிக்க அரசியலுக்குள் தமிழர்களை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர்: மா.சத்திவேல் எடுத்துரைப்பு
பச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வியையே காண்பார்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (17.09.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்த வடுக்கள்
“வடகிழக்கு தமிழர் தாயகத்தில் யுத்த வடுக்களோடு வாழ்வு போராட்டம் நடத்துபவர்கள் சிந்தும் கண்ணீர் தினம் தினம் தாயக மண்ணில் விழுந்து கொண்டிருக்கையில் இனப்படுகொலையுண்டவர்களின் இரத்தம் தேசியத்திற்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கையில் யுத்த சூத்திரதாரிகளை, இனப்படுகொலையாளிகளை மங்கள வாத்தியங்களோடு அழைத்து வந்து பொன்னாடை போர்த்தி மாலையிட்டு மேடையில் அமர்த்துபவர்களும், போலி தேசியம் பேசி தேர்தல் வேட்டையாடுபவர்களும் இன படுகொலையாளர்களே. தமிழர் தேச அரசியல் துரோகிகளே.
இவர்களின் வார்த்தைகளில் மயங்கி வாக்களிக்க முயல்வதும் வாக்கு சாவடிக்கு செல்வதும் தேசியம் காக்க உயிர் கொடையானோரை கொலை செய்வதற்கு ஒப்பாகும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
திலீபன் உயிர் கொடையான மாதம் இதுவாகும்.இந்திய தேசத்தின் அரசியல் மற்றும் காந்தியத்தின் அகிம்சை முகம் எத்தகையது என உலகிற்கு உணர்த்தி உயிர்தியாகமான மாதத்தில் அத்தியாகிக்கு சுடரேற்றி தமிழ் தேசியத்தின் அரசியலுக்கு சங்கூதும் அளவிற்கு அரசியல் துரோகிகள் வளர்ந்துள்ளமை தமிழர் தாயகத்தின் சாபக்கேடு எனலாம்.
தேசியத் தலைவரும் திலீபனும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இந்திய இலங்கை ராஜீவ் காந்தி-ஜெயவர்தன ஒப்பந்தத்தை எதிர்த்ததோடு அதன் மூலம் உருவான தமிழர் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபையை ஏற்றுக் கொள்ளவில்லை.
அது அரசியல் தீர்வாக அமையாது என தெரிந்தும் அதனை அமுல்படுத்துமாறு 2021 இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்சிகளும் அவ்வாறே கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பிய சிவில் சமூகமும் அன்று இந்திய இராணுவம் எம்மவர்களை கொலை செய்ததை போன்று அதே இந்தியாவின் ஆலோசனை வழிகாட்டலோடு தமிழர் தேசிய அரசியலை படுகொலை செய்ய திலீபனை முன்னிலைப்படுத்தி செயல்படுவது வெட்கக்கேடு. இதற்கு இடமளிக்கக்கூடாது.
தமிழர் தேசிய அரசியல்
தமிழர் தேசிய அரசியலுக்கு எதிரான மனநிலையில் இருந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியவர்கள் தமிழர் அரசியலுக்கு துரோகமாக பிழை செய்து விட்டோம் எனக் கூறி அதனை மீள பெறுவதாக மீண்டும் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவார்களா?
அதே போன்று மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக இந்திய பிரதமருக்கு நாம் கடிதம் அனுப்பினோம்.
எம்மை மன்னித்து விடுங்கள் என மக்களிடம் அரசியல் மன்னிப்பு கேட்பார்களா? அவ்வாறு செய்தால் மட்டுமே இவர்கள் அரசியல் நேர்மை வெளிப்படும்.
இல்லையெனில் திலீபனின் சுடர் இவர்களை சுட்டெரிக்கும். தமிழ் மக்கள் பேரவையை மண்ணுக்குள் புதைத்து அதன் மீது தமது கட்சி கொடியை உயர்த்தியவர் தனது வயது மூப்பின் காரணமாகவோ என்னவோ தமது அரசியல் பகையை போக்கிக் கொள்ளவும் இந்திய மற்றும் பேரினவாதிகளின் நட்பை தொடர்ந்து தற்காத்துக் கொள்ளவும் எடுப்பதற்கான முயற்சியாக தமிழ் வேட்பாளரை நிறுத்தி உள்ளதாக கூறுவதாக தோன்றுகின்றது.
அதுவே பொது கட்டமைப்பின் நோக்கமாக இருக்கலாம். இதில் விழுந்து விட வேண்டாம் என தாயக மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
பன்முக தாக்குதல்
அன்று பல்குழல் பீரங்கி தாக்குதல்களுக்கும், குண்டுமழைக்கும் மக்கள் முகம் கொடுத்தது போல் இன்று அரசியல் ரீதியான பன்முக தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கின்றோம்.
அன்று எதிராளி படைகளோடு எம்மவர்களும் சேர்ந்து இயங்கி அழிவை உருவாக்கியது போல இன்றும் எமக்குள் செயற்படும் அரசியல் குள்ளநரிகள் எமக்கு எதிராக திருப்பி உள்ளனர்.
இதனையும் கவனத்தில் கொள்வோம். திலீனின் தியாக ஒளி சுடர் அரசியல் இருளகற்றும். தேசத்தின் மக்களாக விழிப்போடு அரசியல் பயணம் தொடர்வோம்.
தோல்விகள் எமக்கு புதிதல்ல.அதே நேரம் பச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அதுவரை எமது இலக்கு நோக்கி இலட்சியத்தோடு பயணிப்போம்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |