அநுர அரசின் இறுதி நாளை கணிக்கும் சஜித் அணி
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் தினமே இந்த அரசின் இறுதித் தினம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“எதுவுமே தெரியாத அமைச்சர்கள் குழுவொன்று தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றது. அதனை மக்களும் உணர ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழித்து நாட்டைக் கட்டியெழுப்புவது சிறந்த வேலைத்திட்டமாகும்.
கொலை தொடர்பான விசாரணை
எனினும், அது பொது நிர்வாகத்தின் பிரதான பொறுப்பல்ல. போதைப்பொருள் ஒழிப்பு என்பது அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். கடந்த அரசுகளும் இதனைச் செய்திருக்கின்றன. ஆனால், அவை ஊடகங்கள் ஊடாகப் பாரிய பிரசாரங்களாக முன்னெடுக்கப்படவில்லை.

எவ்வாறு அரசை நிர்வகிப்பது என்று தெரியாமல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திண்டாடிக் கொண்டிருக்கின்றார். அதனால் பொலிஸ்மா அதிபர் ஊடாக ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர்.
அந்த அடிப்படையிலேயே வெலிகம பிரதேச சபை தவிசாளரின் கொலை தொடர்பான விசாரணைகளை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக முன்னெடுக்கின்றனர்.
மாகாண சபைத் தேர்தல்
இவ்வாறு பொலிஸ்மா அதிபரைக் கொண்டு ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அரசை எச்சரிக்கின்றோம். போதைப்பொருள் பிரசாரங்களைத் தவிர அபிவிருத்திகள் தொடர்பிலோ முதலீடுகள் தொடர்பிலோ முதலீட்டு வருமானம் தொடர்பிலோ அரசால் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எதிர்க்கட்சிகளை ஒடுக்கி முன்னெடுக்கப்படும் அரசியலுக்கு மக்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எனவே, முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம்.
இனியும் மாகாண சபைத் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் தினமே இந்த அரசின் இறுதித் தினமும் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |